ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 5,077 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அடையாறு:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க., தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அசோக் முன்னிலை வகித்தார்.

தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலர் கண்ணன் தலைமை வகித்தார்.

அ.தி.மு.க.,வின் தலைமை நிலைய செயலரும், சட்டசபை எதிர்கட்சி கொறடாவுமான வேலுமணி, 5,077 பேருக்கு, ஆட்டோ உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வேலுமணி பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்கள் வாயிலாக, ஜெயலலிதா ஒவ்வொருவர் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

''ஒரு கிளை செயலர் முதல்வர் ஆவது அ.தி.மு.க.,வில் தான் நடக்கும். தி.மு.க., ஆட்சி, நான்கு ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. 2026ல் அ.தி.மு.க., உறுதியாக ஜெயிக்கும்,'' என்றார்.

முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, மாநில, மாவட்ட, பிற அணி நிர்வாகிகள், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட பகுதி செயலர்கள், வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

மேலும், குமரன், நாச்சியப்பன், லோகேஷ்வரன், நிர்மல் குமார், முத்துகுமரன், செந்தில்குமார், பாலகிருஷ்ணன், வீரமணி, பாலாஜி உள்ளிட்டோர், நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

Advertisement