வேட்டி - சட்டை ஆசைகாட்டி முதியவரின் நகை பறித்தவர் கைது

அயனாவரம்:செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 64. இவர், சென்னை, அயனாவரத்தில் உள்ள மகள் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 22ம் தேதி காலை, அயனாவரம், புது தெரு வழியாக நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், லோகநாதனிடம் பேச்சு கொடுத்தார்.

பக்கத்து தெருவில் முதியோர்களுக்கு இலவச வேட்டி - சட்டை கொடுப்பதாக கூறி, இருசக்கர வாகனத்தில் லோகநாதனை அழைத்து சென்றார்.

சிறிது துாரத்தில் உள்ள ஜாயின்ட் ஆபிஸ் அருகில், வாகனத்தை நிறுத்தி, லோகநாதன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி சட்டை பாக்கெட்டில் வைக்கும்படி கூறியுள்ளார்.

பின், சாலையோரத்தில் நின்று, சட்டைக்கு அளவு எடுப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி, பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து தப்பினார்.

இதுகுறித்து, லோகநாதன் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான, வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், கொசப்பேட்டையைச் சேர்ந்த கமலநாதன், 40, என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

கமலநாதன் மீது இதேபோல் ஏழு வழக்குள் இருப்பதும், கவனத்தை திசை திருப்பி திருடுவதில் விசாரணையில், கைத்தேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

Advertisement