சாலைகளில் தொழுதால் ஓட்டுநர் உரிமம் ரத்து

43


மீரட்: ரம்ஜான் பண்டிகையையொட்டி, சாலைகளில் தொழுகை நடத்தினால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என, உத்தர பிரதேச போலீசார் அறிவித்துள்ளனர்.


ரம்ஜானையொட்டி, முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடித்து வரும் நிலையில், ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் நாளில் சாலைகளில் கூடி தொழுகை நடத்துவதற்கு உ.பி., போலீசார் தடை விதித்துள்ளனர்.


நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் போது, மசூதிகளிலும், பிரத்யேகமான இடங்களிலும் மட்டுமே சிறப்பு தொழுகைகளை நடத்த வேண்டும் என்றும், சாலைகளில் நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.


இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிலையங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


இதையும் மீறி சாலைகளில் தொழுகை நடத்தினால், கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மீரட் போலீஸ் எஸ்.பி., விபின் தடா எச்சரித்துள்ளார். ரம்ஜானையொட்டி உ.பி., முழுதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக, ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில், ''தடையை மீறி சாலையில் தொழுகை நடத்துவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவானால், அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்; அவை பறிமுதல் செய்யப்படும்.


நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறாமல், புது பாஸ்போர்ட் பெறுவது கடினமாகி விடும்,'' என்றார்.

Advertisement