தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் உள் புகார் குழு அமைக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி: தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் உள் புகார்கள் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி செய்திக்குறிப்பு;

தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கட்டடம் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்கள், தனியார் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பணியமர்த்துபவர்கள், உரிமையாளர்கள் ஆகியோர் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறைதீர்வு சட்டத்தின் கீழ் உள் புகார்கள் குழு அமைக்க வேண்டும்.

இக்குழுவில் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும். புகார் குழு அமைக்கவில்லையெனில், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குழு நோக்கம் குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நோடல் அதிகாரியை நியமித்து நிறுவனங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தொழிற்சாலை விபரங்களை, புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் பகுதிக்கு, புதுச்சேரி காந்தி நகர் தொழிலாளர் துறை வளாகம், முதல் தளம், இணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் - 605 009, jcif@py.gov.in மற்றும் காரைக்கால் பகுதிக்கு காரைக்கால் மதகடி, காமராஜர் நிர்வாக வளாகம், தொழிற்சாலை ஆய்வாளர் - if.kkl@py.gov.in என்ற முகவரியில் அனுப்ப வேண்டும்.

கடைகள் மற்றும் பிற நிறுவனங்களான கேட்ரிங், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கட்டடம் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்கள் விபரங்களை, புதுச்சேரி பகுதிக்கு புதுச்சேரி காந்தி நகர், தொழிலாளர் துறை வளாகம், 3வது தளம், தொழிலாளர் அதிகாரி (அமலாக்கம்), loe@py.gov.in மற்றும் காரைக்கால் மதகடி காமராஜர் நிர்வாக வளாகம், தொழிலாளர் அதிகாரி, 10.kkl@py.gov.in, மாகி மினி சிவில் ஸ்டேஷன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ail.mahe@py.gov.in, ஏனாம் பஜவாடா தெரு தொழிலாளர் உதவி ஆய்வாளர் ail.yanam@py.gov.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement