ராஜபுத்திர மன்னர் பற்றி அவதுாறு பா.ஜ., அமளி; ராஜ்யசபா ஒத்திவைப்பு

புதுடில்லி : ராஜபுத்திர மன்னர் ராணா சங்கா குறித்து சமாஜ்வாதி எம்.பி., அவதுாறாக பேசியதால், ராஜ்யசபாவில் நேற்று பா.ஜ., -எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.


இன்றைய ராஜஸ்தான், குஜராத், ம.பி., ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக, 'மேவார் ராஜ்யம்' இருந்தது. அதன் மன்னராக கி.பி., 15ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணா சங்கா எனப்படும் முதலாம் சங்ராம் சிங்.


ராஜபுத்திர மன்னர்களில் முக்கியமானவரான இவரை 'துரோகி' என உ.பி.,யைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி, ராம்ஜிலால் சுமன் சமீபத்தில் விமர்சித்தார்.


இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆக்ராவில் உள்ள அவரது வீட்டை 'கர்னி சேனா' என்ற அமைப்பினர் சூறையாடினர்.


இந்நிலையில், ராம்ஜிலால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக்கோரி, ராஜ்யசபாவில் நேற்று பா.ஜ., - -எம்.பி.,க்கள் கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டனர்.


“உணர்வுப் பூர்வமான விஷயங்களை பேசும்போது, எம்.பி.,க்கள் பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நடக்க வேண்டும். தேசிய அளவில் போற்றப்படும் ராஜபுத்திர மன்னர் பற்றி ராம்ஜிலால் பேசியது மிக இழிவானது; கண்டனத்துக்குரியது,” என, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.


இதற்கிடையே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ராம்ஜிலால் வீடு சூறையாடப்பட்டுள்ளது,” என்றார்.


இதற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்தார். “இது, ஜாதி ரீதியான பிரச்னையோ, மத ரீதியான பிரச்னையோ கிடையாது. மறைந்த மன்னரை இழிவு படுத்திய விவகாரத்தை, ஜாதி ரீதியாக திருப்ப கார்கே முயற்சிக்கிறார்,” என்றார்.


அதன்பின், பா.ஜ., -- எம்.பி.,க்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். சர்ச்சையாக பேசிய ராம்ஜிலால் சுமன் பேச முயன்றபோதும் அமளி நீடித்தது. 'ராம்ஜிலால் பேசுவது மட்டுமே குறிப்பில் இடம் பெறும்' என ராஜ்யசபா தலைவர் கூறினார். எனினும், அமளி நீடித்ததால் பகல் 12:00 மணி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement