கொத்தடிமைகளாக பணிபுரிந்த 55 பேர் மீட்பு

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் தனியார் செங்கல்சூளை உள்ளது. இதில், வடமாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள், மூன்று மாதங்களாக செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களை, செங்கல் சூளை நடத்துவோர் கொத்தடிமைகளாக நடத்துகின்றனர் என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிற்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவை அடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள், பெரியபாளையம் போலீசார், திருக்கண்டலம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு கொத்தடிமைகளாக இருந்த 22 பெண்கள், 10 சிறுவர் - சிறுமியர் உட்பட மொத்தம் 55 பேர் மீட்கப்பட்டனர். பின், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement