பாதுகாப்பற்ற மின்பெட்டி விபத்து ஏற்படும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மதில் சுவரில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள போர்வெல் மோட்டர் ஸ்டார்ட்டர் பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது.

கீரப்பாளையம் ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சக்திவிளாகம் கிராமத்தில் மின்மோட்டார் கட்டடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. புதிய மின்மோட்டர் கட்டடம் கட்டவில்லை.

இதற்கு பதிலாக அருகில் உள்ள சிவன்கோவில் மதில் சுவரையொட்டி திறந்த வெளியில் ஸ்டார்ட்டர் இரும்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் இரும்பு பெட்டியில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாட்டர் டேங்க் மின்மோட்டரை இயக்க இரும்பு பெட்டியை திறக்கும் லேசான முறையில் மின்சாரம் தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுவர்கள் மதில் சுவரையொட்டி விளையாடி வருகின்றனர்.

எனவே, பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன் ஸ்டார்ட்டர் பெட்டியை பாதுகாப்பான இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement