எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சென்னை: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சையான கருத்தை பரப்பும் எம்புரான் படத்தை தமிழ்நாட்டில், திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிக்கை:
மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோருடன், பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கியும், நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாரை குறி வைத்து இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.இது போன்ற கருத்துக்களை கொண்ட படங்களை எப்படி மத்திய தணிக்கை வாரியம் அனுமதி கொடுத்தது என்பது அதைவிட பேரதிர்ச்சியாக உள்ளது.
கடந்த 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது, 152 அடி தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்ட பின்பும், தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை படத்தில் இடம்பெற மத்திய தணிக்கை வாரியம் அனுமதித்திருக்கக் கூடாது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 கோடி மக்கள் முல்லைப் பெரியாறு அணையை கோவிலாகவும், அதை கட்டிய கர்னல் பென்னி குவிக் அவர்களை கடவுளாக வழிபட்டும் வருகின்றனர்.
தமிழ்நாட்டின் உரிமையின் சின்னமாக தமிழ்நாட்டு மக்கள் கருதும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கிற கருத்து விஷமத்தனமானது. தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் பகையை ஊட்டக்கூடியது, பிரிவினை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ள தணிக்கை சான்றிதழை உடனடியாக ரத்து செய்வதே சரியானதாகும்.
இந்தப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியுள்ளார்.

