நான் ஷிண்டே இல்லை! அமைச்சர் சதீஷ் ஆவேசம்

பெங்களூரு : “நான் கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டே இல்லை,” என, தன்னை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. இவருக்கு முதல்வர் பதவி மீது ஆசை உள்ளது. சமீபத்தில் டில்லி சென்ற அவர், மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆக பார்க்கிறார். கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டே என, சதீஷ் மீது விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து பெங்களூரில் சதீஷ் நேற்று அளித்த பேட்டி:

கஷ்டம், வலி இருந்தாலும் நான் இன்னும் காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன். நான் உட்பட சிலர் தற்போது ஆர்.ஏ.சி., டிக்கெட் பட்டியலில் உள்ளோம். சிலருக்கு டிக்கெட் 'கன்பர்ம்' ஆகிவிட்டது.

ஒருவேளை அவர்கள் ரயிலை தவறவிட்டால், எங்களுக்கு டிக்கெட் கிடைக்கலாம். இங்கு ஏக்நாத் ஷிண்டே அல்லது அஜித் பவார் இல்லை. யாருக்கும் அவர்களை போன்று மாறும் திறமையும் இல்லை. என்னை தேவையின்றி, 'கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டே' என்று சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் பேசுவதை பேசட்டும்; என் வேலையை நான் செய்கிறேன்.

அமைச்சர் ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றது, அவரது மகன் ராஜேந்திராவை கொல்ல முயன்றதும் இரண்டும் வெவ்வேறு வழக்கு. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததில் இருந்து ராஜண்ணாவை இதுவரை சந்திக்கவில்லை.

பா.ஜ., ஆட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகையை நிலுவையில் வைத்துச் சென்றனர். படிப்படியாக பில் தொகை விடுவித்து வருகிறோம். என் துறையில் எந்த நிலுவையும் இல்லை. விரைவில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா இங்கு வருகிறார். தலித் மாநாடு நடத்துவது பற்றி அவருடன் பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement