அரசு பஸ்களில் விரைவில் டிஜிட்டல் கட்டண வசூல்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் டிஜிட்டல் முறையில் பணம் பெற்று மின்னணு முறையில் பயணச் சீட்டு வழங்கும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில் அனைத்து பஸ்களிலும் மின்னணு பயணச் சீட்டு (ஆட்டோமேட்டிக் பேர் கலெக் ஷன் சிஸ்டம்) மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பயணிகளைத் தவிர மற்றவர்களுக்கு இவ்வாறு பயணச் சீட்டு வழங்குகின்றனர்.

நடத்துனர்கள், பயணிகள் இடையே பணம் கையாளும் முறையை எளிமைப்படுத்தவும், சில்லரை பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் இம்முறை பயனுள்ளதாக இருக்கிறது. இனிமேல் கார்டுகள் (டெபிட், கிரெடிட் கார்டுகள்) மூலம் பணம் வழங்குதல், கியூ ஆர் கோட் முறையிலும் டிஜிட்டல் பேமென்ட் மூலம் பயணச் சீட்டு வழங்கும்படி நடத்துனர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க, அதிக எண்ணிக்கையில் மேற்கண்ட வழியில் பயணச் சீட்டு வழங்குவோரை மண்டல அளவில் தேர்வு செய்து பரிசும் வழங்க உள்ளதாக போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை கோட்டத்திலும் இம்முறையை அமல்படுத்த மேலாண் இயக்குனர் சிங்காரவேலு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 729 டவுன் பஸ்கள், 231 மொபசல் பஸ்கள் இயங்குகின்றன. இப்பஸ்களிலும் டிஜிட்டல் முறையில் பயணச் சீட்டு வழங்க சோதனை ரீதியாக அமல்படுத்தினர். கூட்டமான நேரத்தில் இவ்வகையில் சீட்டு வழங்குவது சிரமமாக உள்ளது. சிக்னல் கிடைக்காத நேரத்திலும் தொழில்நுட்ப ரீதியாக தாமதமாகிறது. அதேசமயம் மொபசல் பஸ்களில் இப்பிரச்னை எழவில்லை. விரைவில் இப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு பணபரிவர்த்தனை இல்லாமல் பயணச் சீட்டு வழங்கும் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement