மதுரை கலெக்டர் காரை 'ஜப்தி' செய்ய நடவடிக்கை

மதுரை: நில எடுப்புக்கு உரிய தொகை வழங்காததால் உயர்நீதி மன்ற கிளை உத்தரவுப்படி, மதுரை கலெக்டர் காரை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை தத்தனேரி கருப்பையா. 1973ல் எல்லீஸ் நகரில் இருந்த இவருக்கு சொந்தமான நிலம் 2.14 ஏக்கர் வீட்டுவசதி வாரியத்திற்கு கையகப்படுத்தப்பட்டது. இழப்பீட்டுத் தொகை போதாது என்றுகூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 1983ல் சென்ட் ரூ. ஆயிரம் வீதம் ரூ.2.14 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. இத்தொகையை வீட்டுவசதி வாரியம் வழங்கவில்லை. இதையடுத்து வழக்கு தொடர்ந்து நடந்தது.

2009ல் கலெக்டர், தாசில்தார் காரை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதன்பின் கலெக்டர் காருக்கு ரூ.7 லட்சம், தாசில்தார் காருக்கு ரூ.3 லட்சம் வீதம் ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஐகோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடியானது.

உத்தரவாதம் அளித்தபடி பணத்தை பிப்.24க்குள் செட்டில் செய்வதாக ஜனவரியில் ஒப்புக் கொண்டனர். அதன்படி கார்களை ஒப்படைக்காததால் நேற்று ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் செல்வராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டரின் காரை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது.

Advertisement