பசுமாட்டின் கண்ணில் உருவான  புற்றுநோய் கட்டி அகற்றம் தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி சாதனை

தேனி: தேனி கால்நடை அறிவியல் கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில் பசுமாட்டின் இடது கண்ணில் உருவான தட்டை செல் புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தேனி முத்துத்தேவன்பட்டி விவசாயி சக்தி 52. இவரது ஆறரை வயது கலப்பின பசு மூன்று கன்றுகளை ஈன்று தற்போது 6 மாத சினையாக உள்ளது. இதன் இடது கண்ணில் புண் ஏற்பட்டு பசுவின் இயல்பு நிலை பாதித்தது. கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு பசுவை பரிசோனைக்கு அழைத்து சென்றார். டீன் பொன்னுத்துரை வழிகாட்டுதலில் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், டாக்டர் செந்தில்குமார், உதவி பேராசிரியர்கள் அருண், செளபரண்யா ஆகியோர் பசுவின் கண்ணில் தட்டை செல் புற்றுநோய் கட்டி வளர்ந்திருப்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்தனர். பின் கீழ் சுவாச குழாய் மூலம் மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்து,5.2 செ.மீ., முதல் 6.2 செ.மீ., சதுர அடி அளவுள்ள தட்டை செல் புற்று நோய் கட்டியை அகற்றினர்.

டாக்டர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:இவ்வகை கண் புற்றுநோய் கால்நடைகளுக்கு ஏற்படும். வெள்ளை நிற முகம் கொண்ட கால்நடைகளுக்குஇந்நோய் வர வாய்ப்பு உண்டு. சாதாரணமாக 6 மணி நேரத்திற்கு மேல் கால்நடைகள் வெயிலில் இருந்தால் கண்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.குறிப்பாக 'பொவைன் பாப்பிலோமா வைரஸ், பொவைன் ரைனோட்ராச்சீடிஸ்' வைரஸ் என 2 வகை புற்றுநோய் கட்டிகளில் ஊடுருவியிருக்கும். இந்த பசுமாட்டில் அந்த வைரஸ் பாதிப்பு இல்லை. ரத்தப்போக்கைத் தவிர்க்க உதவும் எலக்ட்ரோ காட்டரி மிஷின் மூலம் கட்டி அகற்றப்பட்டுள்ளது. அதுபோல் கீழ் சுவாச குழாய் மூலம் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும்வசதியும் இங்குதான் உள்ளது என்றார்.

Advertisement