குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கால்வாய் அமைக்கும் பணி தீவிரம் நமக்கு நாமே திட்டத்தில் நடக்கிறது

பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், லட்சுமிபுரம் செங்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நமக்கு நாமே திட்டத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டுமானப்பணி நடந்து வருகிறது. குளத்தை சுற்றி வேலி, நடைபாதை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

லட்சுமிபுரத்தில் 42 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்யும் மழை நீர் கண்மாய்க்கு வருகிறது. முந்தைய கலெக்டர் ஷஜீவனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முயற்சியில் கண்மாய் முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை அகற்றி, நீரை வெளியேற்றி 1 மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரி கரை பலப்படுத்தப்பட்டது.

ஆனாலும் லட்சுமிபுரம் ஊராட்சி பகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் கண்மாய்க்கு சென்று நீர் மாசுபட்டது. இதனால் கண்மாயில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் வகையில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பாக மாவட்ட நிர்வாகத்திடம் ரூ.23.50 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்து, மொத்தம் ரூ.49.50 லட்சத்தில் சாக்கடை கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி நடக்கிறது. இதில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அருகே சாக்கடை கட்டுமான பணி துவங்கி, செங்குளம் கண்மாய் மறுகால் பகுதி வரை 650 மீட்டர் நீளம், 4 அடி அகலத்திற்கு பணி நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து கண்மாயை சுற்றி வேலி, நடைபாதை, பேவர்பிளாக் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் கிராமகமிட்டிக்கு நிதிவழங்கி வருகின்றனர் என தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தனர்.

Advertisement