திருப்பூர் மாநகராட்சியில் ரூ.4.10 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்!

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் 2025- 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம், 1,522 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டில் உபரியாக, 4.10 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் நேற்று 2025 -26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதிக்குழு தலைவர் கோமதி தாக்கல் செய்து பேசியதாவது:

நடப்பு நிதியாண்டுக்கான பயன்பாட்டு குறிக்கோளுடன் அமைந்த இந்த பட்ஜெட்டில், வருவாய் நிதி வரவினமாக 914.22 கோடி ரூபாய்; குடிநீர் வரவினம் 554.9 கோடி மற்றும் ஆரம்ப கல்வி நிதி வரவினம் 52.94 கோடி என 1,522.07 கோடி ரூபாய் வரவினம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், வருவாய் நிதியில் 866 கோடி ரூபாய்; குடிநீர் நிதியில் 599 கோடி மற்றும் ஆரம்ப கல்வி நிதியில் 52.30 கோடி ரூபாய் என 1,517.97 கோடி ரூபாய் செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், 4.10 கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் உரையில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:

குடிநீர் மேம்பாடு திட்டத்தில், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்திய இரு பகுதியில் 98 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. விடுபட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி 78 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நடப்பாண்டில் அனைத்து பகுதியிலும் குறைந்தபட்சம், 3 நாள் இடைவெளியில் குடிநீர் வழங்கப்படும்.

குடிநீர் சப்ளை பணி முழுமையாக ஸ்கேடோ முறையில் கண்காணிக்கும் வகையில், கருவிகள் பொருத்தம் பணி, 85 சதவீதம் முடிந்துள்ளது. இது நிறைவடையும் நிலையில் குடிநீர் சப்ளை குறித்து எஸ்.எம்.எஸ்., வரும். பாதாள சாக்கடை திட்டத்தில், 97 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விடுபட்ட பகுதிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு, வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது.

'நமக்கு நாமே' திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளோம். ரூபாய் 3.10 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும். நகரப் பகுதியில் 250 கி.மீ., நீளத்துக்கு, 133 கோடி ரூபாய் மதிப்பில் சேதமான ரோடுகள் சீரமைக்கப்படும். இதுதவிர, கூடுதலாக, 19 கோடி ரூபாய் மதிப்பில் 27 கி.மீ., மண்சாலைகள் தார் சாலையாக மாற்றப்படும்.

பழுதான கான்கிரீட் ரோடுகள், 90 கி.மீ., நீளத்துக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும். வளர்ச்சி பணி மற்றும் இயற்கை சீற்றங்களால் சேதமடையும் ரோடுகள் சீரமைக்க 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மூலம் 57 கி.மீ., ரோடு சீரமைக்க 8.88 கோடி ரூபாய் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை ரோடுகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

சேதமான மழை நீர் வடிகால்கள் 20 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு செய்யப்படும். மேலும் 24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வடிகால்கள் அமைக்கப்படும். இடுவாயில் உள்ள மாநகராட்சி இடத்தில் 4 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் மின் திட்டம் செயல்படுத்தப்படும்.இதன் வாயிலாக, மின் செலவு கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:

மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், சராசரியாக 600 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இதில் 150 டன் மக்கும் கழிவுகள் 28 நுண் உர மையங்களில் கையாளப்பட்டு உரமாக உற்பத்தி செய்து உள்ளூர் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

வீடுகள் தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க இரு வண்ண பக்கெட்டுகள் வழங்கப்படும். மேலும், 200 மெட்ரிக் டன் கழிவுகள் மூலம் பயோ காஸ் உற்பத்திக்கு டெண்டர் முடித்து பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகள் தரம் பிரித்து, 20 மெகா வாட் மின் உற்பத்திக்கு டாடா நிறுவனம் மூலம் பணிகள் துவங்கப்படவுள்ளது. உ.பி., மாநிலம், வாரணாசி மாநகராட்சியை பின்பற்றி 'ஜீரோ வேஸ்ட்' திட்டம் செயல்படுத்தும் வகையில் தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்காக, 3 ஏக்கர் நிலம், மின் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு நடந்து வருகிறது.

Advertisement