ஆர்.டி.ஓ., பணியிடம் காலி தடுமாறும் நிர்வாக பணிகள்

திருப்பூர் : திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., வாக இருந்த ஜெயதேவராஜ் தர்மபுரி வட்டார போக்குவரத்து துறை அதிகாரியாக பணிமாறுதல் பெற்றுச் சென்று விட்டார்.

இதனால், திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., வாக உள்ள வெங்கிடுபதிக்கு வடக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிக வாகனப் பதிவு உள்ள, பிஸியான அலுவலகங்களில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து கழகமும் ஒன்று. ஆனால், ஆர்.டி.ஓ., இல்லாததால், நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு பணிகளை முடித்து விட்டு அதன் பின் வடக்குக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அனுப்ப வேண்டிய சூழல் உள்ளது. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. நான்கு அல்லது ஆறு போக்குவரத்து ஆய்வாளர் இருக்க வேண்டிய வடக்கு ஆர்.டி.ஓ., பகுதியில் இருவர் மட்டுமே உள்ளனர். ஒருவர் விடுப்பு அல்லது கோர்ட் அலுவல் பணிகளுக்கு சென்று விட்டால், ஒரே ஆய்வாளரே விண்ணப்பங்களில் கையொப்பமிடுவது துவங்கி, வாகன ஒப்புதல், தகுதிச்சான்றிதழ், புதிய பதிவெண் வழங்க வேண்டும் என பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.

தெற்கு ஆர்.டி.ஓ., வீரபாண்டி பிரிவில் இருந்து 15 வேலம்பாளையம் வந்து தினமும் பணியை முடித்துக்கொடுத்து செல்ல வேண்டி இருப்பதால், நிர்வாக பணிகளை கவனிக்க ஆளில்லை. இது இப்படியிருக்க விதிமீறல் வாகனங்கள் ஆய்வு, ஏர்ஹாரன் பறிமுதல், வேகமெடுக்கும் தனியார், மினிபஸ்கள் மீது நடவடிக்கை எல்லாம், கண் துடைப்பாக உள்ளது.

வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலம் முழுதும் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் ஆர்.டி.ஓ., பணியிடம், 40க்கும் அதிகமான இடங்களில் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடர் கருத்துருக்கள் அனுப்பப்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement