வனப்பகுதியில் பிளாஸ்டிக், குப்பை வீசினால் அபராதம் வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் : காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதி சாலைகளில், குப்பைகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என காரமடை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடை வனச்சரகத்தில், மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்திக்கடவு, கொரவன்கண்டி, பில்லுார், முள்ளி போன்ற அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.

காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், பூச்சமரத்துார் சூழல் சுற்றுலா மையமும் உள்ளது. பூச்சமரத்துாரில் தங்கும் விடுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற் றுலா பயணிகள், முள்ளி வழியாக உதகை செல்லும் மக்கள் உள்ளிட்டோர் வெள்ளியங்காடு - மஞ்சூர் சாலையில் வனப்பகுதியோரம், குப்பைகளை வீசி செல்கின்றனர்.

குறிப்பாக தின்பண்டங்கள், மீதமான சாப்பாடு, காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை அதிகம் வீசப்படுகின்றன.

இதனால் உணவு பொருள்களை சாப்பிட வனவிலங்குகள் வனப்பகுதி சாலையோரம் வரும் அபாயம் உள்ளது. இதையடுத்து, காரமடை வனத்துறை சார்பில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், ''வெள்ளியங்காடு - மஞ்சூர் சாலையில் சாலையோரம் உள்ள குப்பைகளை வனத்துறையினர் அகற்றி வருகின்றனர். இவ்வழியாக செல்வோர் கண்டிப்பாக குப்பைகளை சாலையோரம் வீசி செல்லக்கூடாது.

சாலையோரம் கிடைக்கும் உணவுகளை தவறுதலாக வனவிலங்குகள் உட்கொள்ளும் போது பிளாஸ்டிக் கவர்களை உட்கொண்டால், அதன் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

குப்பைகளை வீசி செல்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும். வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது. வனவிலங்குகளை கண்டால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement