'சிந்தடிக்' ஓடுதளம் என்ன ஆச்சு? விளையாட்டு ஆர்வலர் தவிப்புக்கு விடை கிடைக்குமா? சொன்னது ஒன்று... செய்வது வேறு!

திருப்பூரில் திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க, 18 கோடி ரூபாய் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, சிக்கண்ணா கல்லுாரியில், 11 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியது.

தடகள மைதானம் உருவாகும் முன்னரே, பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கும் வகையிலான கேலரி அமைக்கும் பணி சுறுசுறுப்பாகியது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மண் கொட்டி, சமப்படுத்தி, ஓடுதளம் உருவாகி வந்த சூழலில், ஒதுக்கப்பட்ட எட்டு கோடி ரூபாயில், 70 சதவீதம் கேலரி பணிக்கு முடிந்து விட்டது.

மீதமுள்ள தொகையை அரசு ஒதுக்காத நிலையில் 'நமக்கு நாமே' ('டிரிபிள் எஸ்') திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்தது. பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மற்றும் அமைப்புகளில் இது தொடர்பாக பேச்சு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட அளவிலான விளையாட்டு நலக்குழு கூட்டம் அதன பின் முழுமையாக நடக்கவில்லை.

திருப்பூருக்கு இப்படியொரு சிந்தடிக் தடகள மைதான அறிவிப்பு வருமென, 2018ம் ஆண்டுக்கு முன் யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே, அப்போதைய தேவையை பூர்த்தி செய்ய பேட்மின்டன், கூடைப்பந்து, கபடி, பால்பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட உள்ளரங்கு போட்டிகளை விளையாடும் வகையிலான 'இன்டோர்' மைதானத்தை அமைத்து விட்டனர். அரசு நிதியுடன், விளையாட்டு சங்கங்கள் அமைப்புகள் நிதியும் கூடுதலாக இந்த மைதானத்துக்கு திரட்டப்பட்டது. ஆனால், ஏற்கனவே பலர் நிதி அளித்த நிலையில், மீண்டும் கேட்பது முறையாகாது என்ற தயக்கத்தால், அம்முயற்சி அப்படியே உள்ளது.

கலெக்டர் முயற்சி

எடுக்க வேண்டும்

-----------------

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உத்தரவை ஏற்ற பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள், 'சிந்தடிக்' இல்லாமல் எப்படி போட்டி நடத்துவது என்பதை ஆராயாமல் பிரமாண்டமாக கேலரியை முதலில் தடகள மைதானத்தில் கட்டி முடித்து விட்டனர். கிடைத்த எட்டு கோடியை வைத்து, சிந்தடிக் ஓடுதளம் அமைந்திருந்தால், முதல் தர போட்டிகளை நடத்த பலரும் முன்வருவர்; கூட்டம் கூடும். 'ஸ்பான்சர்' எதிர்பார்க்கலாம்.

தற்போது இருப்பது, 'மட்' டிராக் என்பதால், இங்கு மாவட்ட, மாநில தேர்வு போட்டிகளை நடத்திட ஒப்புதல் பெற முடியாத நிலை உள்ளது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வமுடன் இருக்கும் கலெக்டர் கிறிஸ்துராஜ், சிந்தடிக் ஓடுதளம் விஷயத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை முழுமைாக ஆராய்ந்து, அரசிடம் கூடுதல் நிதி கேட்டு பெற முயற்சிக்க வேண்டும். விளையாட்டு நலக்குழு கூட்டத்தை கூட்டி, அவர்களது ஆலோசனைகளையும் அரசுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

--------------------------------

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மைதானம்.

சிந்தடிக் மைதானம் ஏன் தேவை?

மாவட்ட அளவில் போட்டி துவங்கி, மாநில அளவிலான தேர்வு போட்டி வரை 'சிந்தடிக்' ஓடுதள மைதானத்தில் நடக்கிறது. இவ்வகை மைதானங்களில் ஷூ அணிந்து மட்டுமே ஓட முடியும். வேகத்தை கூட்டவும், எளிதில் குறைக்கவும் முடியும். நம் மாவட்ட தடகள வீரர்கள் பயிற்சியே சிந்தடிக் ஓடுதளத்தில் மேற்கொண்டு விட்டால், மாவட்ட வீரர், மாநில தேர்வின் போது சிரமங்கள் இருக்காது. 'மட்' ஓடுதளத்தில் (ஷூ அணிந்து கூட) பயிற்சி மேற்கொண்டாலும், திடீரென 'சிந்தடிக்' ஓடுதளத்தில் ஓடும் போது தடுமாற்றம் ஏற்பட நிச்சயம் வாய்ப்புள்ளது. எனவே, தான் தான் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சிந்தடிக் ஓடுதளத்தில் தடகள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிந்தடிக் தடகள மைதானம் இல்லை என்ற குறையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு இருந்தது. ஆனால், அதற்கான முயற்சிகளை துவக்க நிதி ஒதுக்கீடு முழுமையாக கிடைக்காததால் தாமதம் தொடர்கிறது. 'சிந்தடிக்' தடகள மைதானம் அமையாததால், கால்பந்து மைதானத்துக்கும் வழியில்லாமல் உள்ளது. இந்த சிக்கல்களை தீர்க்க கலெக்டர் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement