கழிவு நீரால் கொசு,சாக்கடை வசதியும் இல்லை ஒட்டன்சத்திரம் நகராட்சி 15வது வார்டில் அவதி

ஒட்டன்சத்திரம்: தேங்கும் கழிவு நீரால் கொசு தொல்லை, சாக்கடை வசதி இல்லாமல் சிரமம் என ஒட்டன்சத்திரம் 15 வது வார்டில் பிரச்னைகள் அதிகம் உள்ளன.

காளியம்மன் கோயில் மேற்கு, சாஸ்தா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு விரிவாக்க பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும் .சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் தெற்கு பகுதியில் செல்லும் கழிவு நீர் ஓடையில் புற்கள் முளைத்து காணப்படுகிறது.

கோயிலின் கிழக்குப் பகுதியில் வரும் சாக்கடையில் கழிவு நீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேற்கு பகுதியில் உள்ள சப்வேயில் மழைநீர் தேங்காமல் இருக்க கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்திலும் பயன்படுத்த முடிகிறது. வார்டுக்கு என தனியாக ரேஷன் கடை பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சுகாதாரம் பாதிப்பு



சாய்மணிகண்டன், பா.ஜ.,நகர துணைத்தலைவர்: விரிவாக்க பகுதிகளில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் பாதசாரிகள் டூவீலர் ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.சாஸ்தா நகர் ஐயப்ப சுவாமி கோயில் தெற்கே உள்ள சாக்கடையில் செடிகள், புல் பூண்டுகள் முளைத்து ஓடையை மறைத்துள்ளது. இந்த ஓடையை அடிக்கடி துார்வாரி கொசுத்தொல்லையை போக்க வேண்டும். சாக்கடைகளில் முளைத்துள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

தேவை சாக்கடை



கே.திருமூர்த்தி ,அ.தி.மு.க., வார்டு செயலாளர்: புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்க தெரு ரோடுகளை தோண்டி சேதப்படுத்தி விட்டனர். இதனை சீரமைக்க வேண்டும். காந்திநகர் பிரிவு ரோட்டில் இருந்து ஐயப்பன் கோயில் வரை ரோட்டில் 3 தெரு விளக்குகள் மட்டுமே உள்ளது. இப்பகுதியில் தெருவிளக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சாஸ்தா நகர் மேற்குப் பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளின் முன்பு குழி தோண்டி கழிவு நீரை விட வேண்டியது உள்ளது . இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றம்



ஜெயமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டு மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க 3 வார்டுகளுக்கு சென்று சிரமப்பட்டு வந்தனர்.

அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததால் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று குப்பையை வாங்குகின்றனர். சாஸ்தா நகர் மேற்கு பகுதியில் சாக்கடை அமைத்து தரப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சிவலிங்க நகரில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட தெரு ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

Advertisement