சேதமான அரசு குடியிருப்பில்- தவிக்கும் வேம்பார்பட்டி மக்கள்

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே வேம்பாரப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோயில் தெருவில் சேதமடைந்த அரசு குடியிருப்பில் தங்கி உள்ள மக்கள் என என்ன நடக்குமோ அச்சத்துடன் இரவில் துாங்குகின்றனர்.

இக்காலனியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 35க்கு மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளின் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்குகிறது. பெரும்பாலான வீடுகளின் சுவர் சேதமடைந்து நிலையில் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். கூறை அடிக்கடி பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழைக்காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் ஒழுகுவதால் கடும் சிரமத்தை மக்கள் அனுபவிக்கின்றனர்.

இடிந்து விழும் நிலையில் சிமென்ட் கூரை



பெ.மணிகண்டன், பா.ஜ., சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர், வேம்பாரப்பட்டி: வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. 35க்கு மேற்பட்ட குடியிருப்புகளின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழும் நிலையில் குடியிருப்புகளில் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இதை சீரமைத்து தர அரசு முன் வர வேண்டும்.

நடவடிக்கை எடுக்கலாமே



வே.சரவணன், சமூக ஆர்வலர், வேம்பார்பட்டி: அரசு கட்டிக் கொடுத்த குடியிருப்புகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அனைத்து குடியிருப்புகளிலும் கூரை சேதம் அடைந்துள்ளதால் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது.

குழந்தைகளுடன் இரவு நேரங்களில் அச்சத்துடன் துாங்க வேண்டிய நிலை உள்ளது. சில வீடுகளுக்கு அரசு நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதேபோல் மற்ற வீடுகளையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதியதாக கட்டிதாருங்க



மு.மாரியம்மாள், கூலி தொழிலாளி, வேம்பாரபட்டி : மழை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் ஒழுகுகின்றன. அதிகாரிகள் குடியிருப்புகளை ஆயவு செய்து செல்கிறார்களே தவிர, அதனை பராமரிப்பு செய்து தர தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்பகுதியில் உள்ள பலரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். அதனால் புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும்.

Advertisement