பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் 39 ஆயிரத்து 105 மாணவர்கள் பங்கேற்பு

கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், 39 ஆயிரத்து, 105 பேர் தேர்வு எழுதினர்; 956 பேர் எழுதவில்லை.

கோவை மாவட்டத்தில், 518 பள்ளிகளை சேர்ந்த, 40 ஆயிரத்து, 61 மாணவர்கள், 158 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு பணியில், 158 முதன்மை கண்காணிப்பாளர்கள், 158 துறை அலுவலர்கள், 46 வழித்தட அலுவலர்கள், 220 பறக்கும் படையினர், 2370 அறை கண்காணிப்பாளர் கள், 320 அலுவலக பணியாளர்கள், 945 'ஸ்கிரைப்'கள் என, 4,217 பேர் ஈடுபட்டுள்ளனர்.

முதல் நாளான நேற்று, தமிழ் மொழிப்பாடத்துக்கான தேர்வு நடந்தது. காலை, 10:00 முதல் மதியம், 1:15 மணி வரை, 100 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வை, 39 ஆயிரத்து, 105 பேர் எழுதினர்; 956 பேர் எழுதவில்லை.

தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

'மிகவும் எளிது'

தமிழ் மொழிப்பாடம் மிகவும் எளிதாக இருந்தது. ஒன்று, ஐந்து, எட்டு மதிப்பெண் வினாக்கள் என, அனைத்தும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்துக்கு வெளியே இருந்து எந்த கேள்விகளும் இடம்பெறவில்லை. நல்ல மதிப்பெண் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது.

-புருஷோத்தமன்

'படித்ததில் இருந்து கேள்வி'

புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததால் தேர்வை பயமின்றி எழுதினேன். வகுப்பறையிலும் ஆசிரியர்கள் குறிப்பிட்டு கற்றுத்தந்த பாடப்பிரிவுகள் இடம்பெற்றதால், வினாக்கள் எளிதாக இருந்தது. தமிழில், 80 முதல், 90 மதிப்பெண்கள் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது.

-சபரி கிரிஷ்

'கடைசி நேரத்தில் படிப்பு'

கட்டுரை எழுதுதல் தொடர்பான எட்டு மதிப்பெண் வினாக்கள் மூன்றும் மிகவும் எளிதாக இருந்தது. தவிர, ஒரு மதிப்பெண் வினாக்களும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டன. கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், கடைசி நேரத்தில் நன்கு படித்ததாலும் தேர்வை பயமின்றி எழுதினேன்.

-பிரவீன்

'திரும்ப படித்தது'

தமிழ் பாட தேர்வில் கடின வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை. வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்றுத்தந்ததை திரும்ப திரும்ப படித்ததால், தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

-ஹரிதா

'நேரம் போதவில்லை'

'கைடு' தொடர்ந்து படித்து வந்ததால், அதிலிருந்து அதிக வினாக்களை நல்ல முறையில் எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. மற்றபடி, எழுதிய விடையை கடைசியில் சரிபார்க்க நேரம் போதவில்லை.

-தர்ஷினி

Advertisement