திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும்! பாலிதீன் பயன்பாடு குறித்து மேயர் கருத்து

திருப்பூர் : ''பாலிதீன் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும்,'' என்று மேயர் பேசினார்.

திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் நடை பெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:

திவாகரன் (தி.மு.க.,): ராயபுரம் பகுதியில் தொடர்ந்து வலியுறுத்தியும் ரோடு பணிகள் முறையாக செய்யப்படாமல் அவதி நிலவுகிறது.

கவிதா, (தி.மு.க.,): ஜனசக்தி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலத்தில் தற்போது கோர்ட் உத்தரவு என்ற பெயரில் சிலர் அவர்களை மிரட்டி காலி செய்ய வற்புறுத்துகின்றனர். அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,): ஒப்பந்த நிறுவனங்கள் தொகை நிலுவை என்று பணிகளை செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.

ராதாகிருஷ்ணன்: மத்திய அரசு பல்வேறு வகை யில், மாநில அரசை வஞ்சிக்கிறது. எனவே, மத்தியை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேயர் தினேஷ்குமார்: கடந்த 2017 முதல் 2024ம் ஆண்டு முதல் அரையாண்டு வரையிலான எந்த தொகையும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு நிலுவையில்லை. அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது.

குடிநீர் வினியோகத்தில் பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. குடிநீர் பணியை கண்காணிக்க உரிய பொறுப்பு அலுவலர் நியமனம் செய்யப்படும். பாலிதீன் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறோம்.

திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும். உற்பத்தி நிலையிலேயே இதை தடுக்க வேண்டும். தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement