தனிப்பட்ட மருத்துவ சான்று இனி கொடுக்க முடியாது!

திருப்பூர் : 'காவலர்கள் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று, விடுப்புக்கான காரணத்துடன் மருத்துவச்சான்று பெற்றுக் கொள்ளலாம்,' என, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடல் நலக்குறைபாடு காரணமாக தொடர் விடுமுறை எடுப்பவர்கள் பள்ளி, கல்லுாரி, அலுவலகம், நிறுவனங்களில் தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவச் சான்றிதழை சமர்பிக்க, அதற்கான சான்றிதழ் பெற அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வருகின்றனர். சிலர் நேரடியாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர், இருப்பிட மருத்துவ அலுவலர், உதவி மருத்துவ அலுவலர் உள்ளிட்டோரை சந்திக்க முனைகின்றனர்.

குறிப்பாக, பல்வேறு துறைகளில் 'பொறுப்புகளில்' இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை சந்தித்து சான்றிதழ் பெற முயற்சிக்கின்றனர். அலுவல் பணிகளுக்கு இது நெருக்கடியாக இருப்பதுடன், உயரதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இதனையடுத்து, மருத்துவக் கல்லுாரி டீன் அலுவலக முகப்பு பகுதி, இருப்பிட மருத்துவ அலுவலகம், வளாக பகுதிகளில் முக்கிய அறிவிப்பு என குறிப்பிட்டு ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், 'இம்மருத்துவமனையில் எந்தவித நபர்களுக்கும் தனிப்பட்ட மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. (காவலர் உட்பட) கடவுசீட்டு கொண்டு வரும் காவலர்கள் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று விடுப்புக்கான காரணத்துடன் மருத்துவச்சான்று பெற்றுக் கொள்ளலாம்,' என எழுதப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உயரதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'சான்றிதழ் பெற விரும்புவோரின் உடல்நிலையை டாக்டர் பரிசோதித்த பின்பு தான் சான்றிதழ் வழங்க முடியும். இது குறித்து பலமுறை தெரிவித்த போதும், தொடர்ந்து அலுவலகத்துக்குள் பலர் வருவதால், இவ்வாறு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement