கடைமடைக்கு தண்ணீர் வரலே... மும்முனை மின்சாரத்தில் வெட்டு... தெருநாய் தொல்லை ------------------------------------------------------------------------- குறைகேட்பு கூட்டத்தில் குறைகளுக்கு பஞ்சமில்லை விவசாயி பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் தொல்லையில்லை விவசாயிகள் வேண்டுகோள்

திருப்பூர் : கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பல்வேறு குறைகளை விவசாயிகள் அடுக்கினர். பிரச்னைகளை உரிய தீர்வு காணப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வேளாண்துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷீலா பூசலட்சுமி வரவேற்றார்.

கூட்டம் துவங்கியதும், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 34 மனுக்கள் மீது, உரிய பதில் அனுப்பாமல் இருப்பது குறித்து, டி.ஆர்.ஓ., ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

பழநி மாவட்டம் வேண்டாம்!

------------------------

தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் மனோகரன்: உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைத்து, திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாகியும், முழுமையான வசதிகளை பெறவில்லை. இந்நிலையில், மடத்துக்குளம், உடுமலை தாலுகாக்களை கொண்ட பழநி மாவட்டம் உருவாக்குவதாக வதந்தி பரவி வருகிறது; அத்தகைய முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்.

3 ஆயிரம் கிலோ நெல் கொள்முதல்

----------------------------

அலங்கியம் விவசாயி பழனிசாமி: அலங்கியம் சுற்றுப்பகுதிகளில், மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது; சோளத்தை வெயிலில் உலர்த்த, தனியார் உலர்களங்களை பயன்படுத்தி வருகிறோம். தாராபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, எட்டு நெல் கொள்முதல் மையங்களில், 3 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும். அதாவது, ஏக்கருக்கு, 2,400 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மடத்துக்குளத்தில், 2,600 கிலோ வரை கொள்முதல் செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும், ஏக்கருக்கு, 3 ஆயிரம் கிலோ நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

தென்னந்தோப்பில் மின் புதைவடம்

-----------------------------

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து: தாராபுரம் சுற்றுப்பகுதிகளில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது; குறிப்பாக, தாழ்வழுத்த மின்சாரத்தால், விவசாய மின் மோட்டார்கள் கருகி விடுகின்றன. தென்னை மரங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகளால், விபத்து ஏற்படுகிறது. அவற்றை, புதைவடமாக மாற்றியமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொள்ளாச்சியில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைமடைக்கு தண்ணீர் வரலை

--------------------------

வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன சங்க தலைவர் வேலுசாமி: அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், வெள்ளகோவில், காங்கயம் கடைமடை பகுதிகளுக்கு, பி.ஏ.பி., பாசன நீர் வந்து சேரவில்லை. ஒதுக்கீட்டில், 65 சதவீதம் மட்டுமே தண்ணீர் கிடைத்து வந்தது; இந்தாண்டு மேலும் குறைந்துவிட்டது. திட்டக்குழுவுடன் பேசி, கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வேண்டும் இணைப்பு பாதை

-------------------------

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி: கிராமங்களில் தெரு நாய்கள் தொல்லையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக, கருத்தடை முகாம் நடத்த வேண்டும். அவிநாசி தாலுகா, பழங்கரை - பொங்குபாளையம் இடையே உள்ள இணைப்பு பாதையை, தார்ரோடாக தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும்.

மும்முனை மின்சாரத்தில் 'வெட்டு'

--------------------------

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார்: அவிநாசி ஒன்றியம், குட்டகம் சுற்று வட்டார கிராமங்களில் இரவு, 10:00 முதல், காலை, 6:00 மணி வரை, மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இதனை, 12 மணி நேரத்துக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக, இரவு, 12:00 மணி முதல், காலை, 6:00 வரை மட்டும் மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். திருப்பூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், கோட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெயர்பலகை மட்டும் திறக்கப்பட்ட ஊத்துக்குளி மின் கோட்டத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ரூ.1.50 கோடி மட்டும் தானா?

------------------------

உடுமலை விவசாயி பரமசிவம்: பி.ஏ.பி., திட்ட வாய்க்கால்களை, வேலை உறுதி திட்டத்தில் துார்வாரி சுத்தம் செய்வதால், தண்ணீர் நன்றாக வருகிறது. நிதியாண்டின் இறுதியில், அத்திட்டத்தில் நிதி பற்றாக்குறையால் பணி பாதிக்கிறது. இனிவரும் ஆண்டுகளில், பி.ஏ.பி., வாய்க்கால் பராமரிப்பு பணிக்கு, தனியே நிதி ஒதுக்க வேண்டும். தமிழக பட்ஜெட்டில், நீர்வளத்துறை பணிகளுக்கு, கோவை மண்டலத்துக்கு, 1.50 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது; கூடுதல் நிதி ஒதுக்கி, திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். காட்டுப்பன்றியை சுட்டுப்பிடிக்கும் உத்தரவு தொடர்பாக, விரைவில் குழு அமைத்து, வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

காப்பீட்டுக்கு ரசீது இல்லையா?

-------------------------

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன்: திருப்பூர் மாவட்டத்தில், தென்னை மரத்தில் வெள்ளை ஈக்கள் பாதிப்புக்கு, அதே பாணியை தொடரலாம் என, அரசு தெரிவித்துள்ளது. தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில், அனைத்து மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன; தகுந்த தடுப்பு நடவடிக்கை இல்லை. ஒருங்கிணைந்த தடுப்பு முறையை செய்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். வனத்துறையின் நில ஆக்கிரமிப்பு மற்றும் நீர் வழி புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பயிர்க்காப்பீடு திட்டத்தில், எந்தவொரு பயிருக்கும் காப்பீட்டு சந்தா செலுத்திய ரசீது வழங்குவதில்லை.

மாட்டு சந்தையில் இரட்டை சுங்கம்

------------------------------

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணியம்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு சந்தைகளில், இரண்டு சுங்கம் வசூலிக்கும் அநியாயம் நடந்து வருகிறது. மாடு உள்ளே வரும் போதும், விற்பனையாகி வெளியே செல்லும் போதும், தனித்தனியே சுங்கம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். இதனால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் பாதிக்கின்றனர். இது விஷயத்தில், கள ஆய்வு செய்தால், மட்டுமே உண்மை வெளியே வரும்.

உடுமலை மாவட்டம் உருவாகுமா?

-----------------------------

பா.ஜ., விவசாய அணி நிர்வாகி மவுனகுருசாமி: உடுமலையை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, பழநி ஆகிய தாலுகாக்களை சேர்த்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். அனைத்து வசதிகளும் இருப்பதால், உடுமலைமை தலைமையிடமாக கொண்ட மாவட்டம் அமைய வேண்டும். பயிர் பாதுகாப்பு மருந்துகளான, 'அசோடோபாக்டர்', 'பாஸ்போபாக்டர்', 'அசோஸ்பைரில்லம்' போன்ற மருந்துகளை வழங்க வேண்டும்.

பொறியாளர் பணியிடம் 'காலி'

------------------------

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலசங்க தலைவர் பொன்னுசாமி: திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது; கோட்ட பொறியாளர் பணியிடமும் ஆறு மாதமாக காலியாக இருக்கிறது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போது மட்டுமே மின்சாரம் சார்ந்த பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும்.

-------------------------------------------------------------------

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள்ம் நடந்தது. குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கோவை வேளாண் பல்கலை மாணவியர்.

மாவட்ட அளவில் கருத்தரங்கு

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''தென்னை மரங்களுக்கு இடையே, மின் கம்பி செல்வதை தவிர்க்க, மின் புதைவடம் அமைக்க வேண்டும். வேளாண்துறையினர், பொள்ளாச்சி சென்று ஆய்வு நடத்தி வந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை ஈ பிரச்னைக்கு சரியான தீர்வு காணும் வகையில், வரும் மாதம், மாவட்ட அளவிலான, கருத்தரங்கு நடத்தவும் தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது,'' என்றார்.

Advertisement