பவானி ஆற்றை மீட்டெடுக்க பா.ஜ., போராட்டம் நடத்த முடிவு

மேட்டுப்பாளையம்: ''பல வண்ணங்களில் நிறம் மாறி, மாசு அடைந்து வரும், பவானி ஆற்றை மீட்டெடுக்க, பாரதிய ஜனதா கட்சி போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளது.

பவானி ஆற்றில், தண்ணீர் கருப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இந்த தண்ணீரை பல லட்சம் பொதுமக்கள் குடிநீராக குடித்து வருகின்றனர்.

மாசடைந்த தண்ணீரை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மட்டுமே செய்கின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் நேற்று பா.ஜ. கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், பா.ஜ., பவானி நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் சாந்தி, சதீஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, சாமிநாதன், விக்னேஷ் உள்ளிட்டோர், சிறுமுகை விஸ்கோஸ் பம்பு ஹவுஸ் அருகே பவானி ஆற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்டத் தலைவர் மாரிமுத்து கூறுகையில், ''மேட்டுப்பாளையம் நகரின் கழிவுநீரும், ஆற்றின் கரையோரம் உள்ள ஆலைகளின் சுத்தம் செய்யாத கழிவு நீரும் ஆற்றில் கலப்பதால், பவானி ஆறு பல வண்ண நிறங்களாக மாறி உள்ளது. தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில், பவானி ஆறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும். மேலும் இந்த ஆற்றுத் தண்ணீர் குடிக்க உகந்ததா என அறிவிக்க வேண்டும்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள், தமிழக முதல்வர் இதற்கு தீர்வு காண அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ., பவானி நதிநீர் பாதுகாப்பு குழு ஒவ்வொரு கிராமமாக சென்று, பவானி ஆறு பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும். பா.ஜ., சார்பில் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தும்,'' என்றார்.

Advertisement