சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில்  மாணவிகள் விடுதிக்கு கூடுதல் '‛கேமரா'

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் மாணவிகள் விடுதி அமைந்துள்ள பகுதியில் சிசிடிவி கேமரா தெரு விளக்கு பொருத்தும் பணி நடக்கிறது.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டராக இருந்த மாணவி ஒருவர் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்து, விடுதிக்கு சென்றார். இவரை பின் தொடர்ந்து சென்ற சிவகங்கை ஆவரங்காடு சந்தோஷ் 20, அவரிடம் தகராறில் ஈடுபட்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.

இருப்பினும் மருத்துவ கல்லுாரி, மாணவிகள் விடுதி வளாகத்தில் போதிய விளக்கு, சி.சி.டி.வி., கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வில்லை என புகார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் அனைவரும் டீன் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவர்கள் போராட்டம் குறித்து மருத்துவர்கள் சங்கம் மற்றும் மாணவர்கள் சார்பில் கலெக்டர் ஆஷா அஜித்திற்கு புகார் சென்றது. அவர் மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தை கடிந்து கொண்டார். மருத்துவ மாணவர், மாணவிகள் விடுதிகள், டாக்டர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே உள்ளதை விட 25 இடங்களில் கூடுதலாக எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தியுள்ளனர். மருத்துவமனை உள், வெளிநோயாளிகள் பிரிவு பகுதியில் 106 சி.சி.டி.வி., கேமராக்கள் உள்ளன.

புதிதாக 47 'சிசிடிவி' கேமராக்கள்



மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிக்கு செல்லும் ரோட்டில் போதிய கேமரா வசதி இல்லை என புகார் அளித்தனர். இச் சம்பவத்தை அடுத்து கூடுதலாக 47 இடங்களில் 'சிசிடிவி., (எச்.டி.,) கேமராக்கள் பொருத்தி வருகின்றனர்.

Advertisement