ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை : ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா, போதை மாத்திரைகளை கடத்தி வருவதை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம், மேற்கு வங்கம், ஷாலிமரில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயிலில் கோவை ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பக்க பொது பெட்டியில் இருந்த ஒரு பேக்கை சோதனை செய்த போது அதில், 6.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதேபோல், அசாம், திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை செய்ததில் முன்பக்க பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மொத்தம், 9.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement