தேசிய பாதுகாப்பு ஆலோசகரை மாற்ற அமெரிக்க அதிபர் ஆலோசனை

வாஷிங்டன்: ஏமன் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கும் அரசு குழுவில், பத்திரிகையாளர் ஒருவரை சேர்த்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்சை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சை



மேற்காசிய நாடான ஏமனில் இருந்து செயல்படும், ஹவுதி பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்களில் சமீபத்தில் ஈடுபட்டது.

இந்த தாக்குதல் தொடர்பாக திட்டமிட மற்றும் செயல்படுத்த, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தலைமையில், 'சிக்னல்' என்ற சமூக வலைதளத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உட்பட, 17 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'தி அட்லாண்டிக்' என்ற பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் ஜெப்ரி கோல்ட்பர்க் இந்தக் குழுவில் தவறுதலாக சேர்க்கப்பட்டார்.

உயர் ராணுவ மற்றும் உளவு அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழுவில், அவர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ஹவுதி பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இந்த சமூக வலைதளக் குழுவில் நடந்த தகவல் பரிமாற்றங்களை, அவர் தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்டார்.

இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் ஜெப்ரி கோல்ட்பர்கை அந்தக் குழுவில் இணைத்தது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் என்பது தெரியவந்தது.

தர்மசங்கடம்



இந்த விவகாரம் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், அதை சமாளிக்கும் வகையில், 'இந்த விவகாரத்தால் எந்த பிரச்னையும் இல்லை' என, அவர் கூறி வந்தார்.

இதற்கிடையே, மைக் வால்ட்சை பதவியில் இருந்து நீக்கலாமா என்று அவர், தன் உதவியாளர்கள், நெருங்கிய அமைச்சர்கள், நண்பர்களுடன் ஆலோசனை செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகிஉள்ளன.

அவ்வாறு பதவியில் இருந்து நீக்கினால், அது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்று ஆலோசனை கூறப்பட்டதால், பதவியில் இருந்து நீக்கும் முடிவை டிரம்ப் கைவிட்டதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement