இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'

தேனி:கள்ளர் பள்ளிகளின் இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


தேனி தேவாரம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் தங்கி அருகில் உள்ள கள்ளர் நடுநிலைப்பள்ளியில் இயங்கி வரும் சத்துணவு மையத்தில் பணியாளராக வேலை செய்கிறார். இப்பள்ளியில் ஆசிரியராக ஜெயபிரகாஷ் பணியாற்றுகிறார். இவரும் ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் குபேந்திரன் ஆகியோர் இணைந்து, 40 வயது சத்துணவு மைய பணியாளரை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தில் அலைபேசியில் ஆபாசமாக பேசினர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 22ல் மாலை பெண் தங்கியிருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த ஆசிரியர் ஜெயபிரகாஷ், 'உன் வேலையை காலி செய்திடுவேன்' என மிரட்டி, பாலியல் ரீதியாக இடையூறு செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 40 வயது சத்துணவு பெண் பணியாளர் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ.. மலரம்மாளிடம் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ.சிவக்குமார் ஆகியோர் இரு ஆசிரியர்கள் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டுவது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்த இரு ஆசிரியர்களுக்கும் அரசு கள்ளர் பள்ளிகளின் மதுரை மண்டல இணை இயக்குனர் முனுசாமி, 'விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இணை இயக்குனர் கூறுகையில், 'இரு ஆசிரியர்களுக்கும் முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ', என்றார்.

Advertisement