கழிவுகளால் இப்போது பிரச்னை இல்லை!

நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியுடன் இணைந்து, மட்கும் குப்பையை இயந்திரம் வாயிலாக கூழாக்கி, உலர் உரமாக மாற்றி விற்பனை செய்யும், 'கிளீன் குன்னுார்' அமைப்பை சேர்ந்த, டாக்டர் வசந்தன் பஞ்சவர்ணம்:
பவானி ஆற்றின் கிளை ஆறான குன்னுார் ஆற்றை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆற்றுக்குள் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
குன்னுார் நகர பகுதியில் உருவாகும் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால், மழையின் போது அடித்து வரப்பட்டு, குன்னுார் ஆறு மாசடைவதற்கு காரணமாக இருக்கிறது.
இதே போல, திறந்தவெளியில் குப்பையை கொட்டுவதால் வன விலங்குகள், கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில், எங்கள் அமைப்பின் சார்பில், குன்னுாரை சுத்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தோம்.
அதன் பின் தான், குன்னுார் நகராட்சியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தோம். குன்னுாரில், தினமும், 5.6 டன் திடக்கழிவுகளும், 8 டன் ஈரக்கழிவுகளும் உருவாகின்றன. மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்குமாறு முதலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்; படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது.
மட்காத குப்பையை, 'கம்ப்ரசர்' இயந்திரங்கள் வாயிலாக அழுத்தம் கொடுத்து, உருமாற்றம் செய்து மறுசுழற்சிக்கு அனுப்பினோம். கழிவுகளை கையாள்வதில் நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தினோம்.
மட்கும் குப்பையான இறைச்சி கழிவுகள், தாவர கழிவுகள், உணவு கழிவுகள் போன்றவற்றை இயந்திரம் மூலம் கூழாக்கி, கிடங்கில் பதப்படுத்துகிறோம். அவை, தொடர் செயல்முறைகள் வாயிலாக அடுத்த, 50 நாட்களில் உலர் உரமாக மாறி விடுகின்றன.
கடந்த இரு ஆண்டு களில் மட்டும், 60,000 டன் மட்கும் குப்பையை இயற்கை உரமாக மாற்றியிருக்கிறோம். இந்த உரத்திற்கு, 'பசுமை செழிப்பு உரம்' என்று பெயர் வைத்து விற்பனையும் செய்கிறோம்.
இந்த உரத்தில் மீன் கழிவுகளும் சேர்வதால், பழங்கள் மற்றும் காய்கறி செடிகளுக்கு பயன்படுத்தும்போது, அதன் நிறம் அதிகரிப்பதாக, அதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.
இதனாலேயே கார்னேஷன், கொய்மலர் என்று மலர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும், கேரட், பீட்ரூட் போன்ற நிறமுள்ள காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும், இந்த உரத்தை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
தோட்டக்கலை துறையும் இந்த உரத்தை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த இருக்கிறோம். கழிவுகளை முறையாக சேகரித்து உரமாக்கினால், கழிவுகள் நமக்கு ஒரு பிரச்னையாகவே இருக்காது; சுற்றுச்சூழலுக்கு நன்மையே பயக்கும்!
தொடர்புக்கு:
79046 65128
மேலும்
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்