ஏழு பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

சென்னை: ஏழு பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நகரங்களை ஒட்டியுள்ள ஊராட்சி மக்களுக்கும், நகரங்களில் உள்ள வசதிகளை செய்து கொடுப்பதற்காக, அவற்றை நகரங்களுடன் இணைத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடியும் போது, தமிழகத்தில், 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் இருக்கும் என, சமீபத்தில் சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவித்தார்.

அந்த வகையில், தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, போளூர், செங்கம்; கன்னியாகுமரி; சேலம் மாவட்டம் சங்ககிரி; நீலகிரி மாவட்டம் கோத்தகிரி; திருப்பூர் மாவட்டம் அவிநாசி; ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய ஏழு பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, அடுத்த தேர்தலில் வார்டுகள் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement