பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?

6

சென்னை: ரூ.10 லட்சம் வரை சொத்துக்கள் பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது ஓரு சதவீத பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை, எந்தெந்த இனங்களுக்கு பொருந்தும், பொருந்தாது என்று பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.

பத்திரப்பதிவுத்துறை அறிக்கை:

ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களுக்கும், பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது, இன்று (ஏப்.1)முதல் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.


இது குறித்து கடந்த மார்ச்-14ம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து, ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது ஏப். 1 முதல் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.


அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


யாருக்கு சலுகை பொருந்தும்:

ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து, அதில் பெண்கள் பெயரில் மட்டுமே சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.

ஒரு சொத்தினை, குடும்ப நபர்கள் சேர்ந்து, அதில் பெண்கள் பெயரில் மட்டுமே வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.




யாருக்கு சலுகை பொருந்தாது:
ஒரு சொத்தினை, குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி கூட்டாக சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தாது.

ஒரு சொத்தினை குடும்ப நபர்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.

ஒரு சொத்தினை குடும்பம் அல்லாத நபர்கள் சேர்ந்து அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.


ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து, அதில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.


சொத்தின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு ரூ.10 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். சலுகையை பெறுவதற்காக,ஒரு சொத்தை வேண்டுமென்றே பல பகுதிகளாக பிரிக்கக்கூடாது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு 2400 சதுரடி காலி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி 12 லட்சம் ரூபாய் வருகிறது. இதை, இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடியாக பிரித்து ஆவணங்கள் வேறு வேறு பெண்கள் பெயரில் பதிவுக்கு தாக்கல் செய்தாலும் இந்த சலுகை பொருந்தும்.

ஒரு 2400 சதுரடி காலி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பு 12 லட்சம் வருகிறது என்றால், சலுகை பெறுவதற்காக இரண்டு 1200 சதுர அடி அல்லது நான்கு 600 சதுரடி மனைகளாக பிரித்து ஆவணங்கள் ஒரே பெண் பெயரில் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால், சலுகை பொருந்தாது.

Advertisement