'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை': * சொல்கிறார் தினகரன்

பரமக்குடி: ''தி.மு.க., வின் சட்டம் ஒழுங்கு அவர்கள் சார்ந்த வீட்டை சுற்றி தான் சரியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூலிப்படைகள் அதிகரித்துள்ளது,'' என பரமக்குடியில் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார்.

அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் அனைத்து தொகுதிகளிலும் நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க., கூட்டணி குறித்து சிந்தித்து தான் கூறி இருப்பார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு பணியாற்ற காத்திருக்கிறோம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசு கொடுத்திருக்கலாம். மக்கள் ஏற்றுக் கொள்வது போல் தகுதியான ஒருவரின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படும்.

தமிழகத்தில் டாஸ்மாக் வரை ஊழல் பெருகி விட்டது. அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உள்ளது. ஆட்சியின் அவலங்களை திசை திருப்ப போராட்டங்களை தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர். காங்., ஆட்சியை விட பிரதமர் மோடி ஆட்சியில் அதிக நிதி தமிழகத்திற்கு வந்துள்ளது என நிதி அமைச்சர் கூறியுள்ளார் என்றார்.

Advertisement