கோவிலை இடிக்க எதிர்ப்பு: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஐகோர்ட் உத்தரவுபடி, கோவிலை இடிக்க வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு எற்பட்டது.

விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, பவர் ஹவுஸ் சாலையில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் கட்டி 77 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு கோவில் இடையூறாக இருப்பதாகவும், கோவில் நகராட்சி, ரயில்வே இடத்திற்கு செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ளதால் இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நிறுவனர் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்நதது.

இந்த வழக்கில், கடந்தாண்டு ஜனவரி மாதம், கோவிலை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதனால், தனியார் நிறுவனம் மீண்டும் ஐகோர்ட்டை நாடியது.

அதன்பேரில், கோவிலை 2 வாரங்களுக்குள் அகற்றிவிட்டு, அறிக்கை சமர்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து, நேற்று காலை 11:00 மணிக்கு கோவிலை இடிக்க ஜே.சி.பி.,யுடன் வருவாய், நகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள், ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையில் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா மற்றும் போலீசாருடன் சென்றனர்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள், கோவில் முன் திண்டு இடிக்க விடாமல், தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

ஆர்.டி.ஓ., முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோர்ட் உத்தரவின் பேரில் இடிக்க வந்துள்ளோம். ஒரு வார கால அவகாசம் வழங்குகிறோம்.

அதற்குள் நீங்கள் கோர்ட்டை நாடினாலும், அந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண்பது என்பது உங்கள் பொறுப்பு.

ஒரு வாரம் முடிந்தவுடன் எங்களை கோர்ட் உத்தரவை அமல்படுத்த வழிவிட வேண்டும் என கூறி விட்டு மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement