போலீஸ் நிலையத்தில் கத்திக்குத்து; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில், குடும்ப தகராறு தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு கத்தி குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கள்ளக்குறிச்சி அடுத்த மட்டிகைக்குறிச்சி புதுகாலனியை சேர்ந்தவர் சுரேந்தர்,32; இவரது மனைவி திலகவதி,31; திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 13 வயதில் மகள், 10வயதில் மகன் உள்ளனர்.


கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகரா றில், கணவரை பிரிந்த திலகவதி, கடந்த 3 ஆண்டுகளாக அணைக்கரை கோட்டாலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சுரேந்தருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் திலகவதி புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார் நேற்று சுரேந்தர், அவரது மனைவி திலகவதி மற்றும் இருவரது குடும்பத்தாரை அழைத்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

அப்போது, இரு குடும்பத்தாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில், திலகவதியின் உறவினர் சுப்ரமணி, 45; யை, சுரேந்தரின் உறவினர் பாலாஜி, 29; என்பவர் கத்தியால் வயிற்றில் வயிற்றில் குத்தினார். காயமடைந்த சுப்ரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சுரேந்தர் அவரது தந்தை கொளஞ்சி, 42; மற்றும் உறவினர் பாலாஜி, 29; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement