பாங்காக்கில் 30 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் சீன நிறுவனத்திற்கு சிக்கல்; ஆவணங்களை அகற்ற வந்ததாக 4 பேர் கைது

3


பாங்காக்: தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 30 மாடி கட்டடம் சரிந்து விழுந்த இடத்திற்கு சட்டவிரோதமாக சென்றதாக, கட்டட கட்டுமான திட்ட மேலாளர் உள்பட சீனர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்ததில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது.

சாதுசாக் பகுதியில் அமைந்துள்ள 30 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அப்போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரையில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியை பாங்காக் கவர்னர் பேரிடர் பகுதியாக அறிவித்தார். இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாய்லாந்து அரசின் தணிக்கை துறைக்காக கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டடத்தை சீனாவை சேர்ந்த துணை நிறுவனம் கட்டி வருவது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கத்தில் ஒரு கட்டடம் மட்டுமே இடிந்து விழுந்துள்ளதால், கட்டடத்தின் உறுதித்தன்மை சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது சீன நிறுவனத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தாய்லாந்து அரசு விசாரணையில் இறங்கியுள்ள நிலையில், சட்டவிரோதமாக கட்டடம் இடிந்து விழுந்த பகுதிக்கு சென்றதாக, கட்டட கட்டுமான திட்ட மேலாளர் உள்பட சீன நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் ஆவணங்களை அகற்றுவதற்காக, அனுமதியின்றி சீனாவைச் சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் எந்த அனுமதி கடிதமும் இல்லை," என்று கூறினார். இதனிடையே, இன்சூரன்ஸை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காகவே, ஆவணங்களை எடுக்க வந்ததாக கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement