கழிவுநீர் குழாய் பதிப்பு பணி முடிந்தும் சாலைகளை சீரமைக்காததால் அவதி துரைப்பாக்கம், சாய் நகர்வாசிகள் பரிதவிப்பு

துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கம், சாய் நகரில் கழிவுநீர் குழாய் பதிப்பு மற்றும் வடிகால் கட்டும் பணி நடக்கிறது.

இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வதால், சாலைகள் மிகவும் மோசம் அடைந்துள்ளன. இது துறைகளும் ஒருங்கிணைந்து செய்யாததால், ஆங்காங்கே பள்ளம் எடுத்த பணி, பாதியில் நிற்கிறது.

பணி காரணமாக, ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறி, தெரு முழுவும் சேறும், சகதியாகவும் உள்ளது.

இதனால், வயதானோர், பள்ளி மாணவ - மாணவியர் தெருவில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.

இரவு நேரத்தில், சகதியில் வழுக்கி விழுந்த சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோரும் சகதியில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

பணி நடக்கும் போது பாதுகாப்பு தடுப்பு அமைத்து, பணி முடிந்ததும் சாலை சமப்படுத்தி சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளோம்.

ஆனால், குடிநீர் வாரியமும், மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை. சகதியில் தடுக்கி விழுவது, குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்னைகளால் சிரமப்படுகிறோம். பணி முடிந்த தெருக்களில், தார் சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வாரியம், பணி முடிந்த தெருக்களில் தடையின்மை சான்று வழங்க வேண்டும். அதன் பின், சாலையை சீரமைக்க தயாராக உள்ளோம்,' என்றனர்.

Advertisement