பரந்துார் விமான நிலையம் இந்த வாரம் திட்ட அனுமதி

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு, இந்த வாரம் வழங்க உள்ளது. இதைத்தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட உள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, 5,320 ஏக்கர் தேவை.

எனவே, பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 3,750 ஏக்கர் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. மீதி, அரசு நிலம்.

பரந்துார் விமான நிலைய கட்டுமான பணிகளை, அடுத்தாண்டு ஜனவரியில் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பரந்துார் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய்.

பரந்துார் விமான நிலைய இட தேர்வுக்கு, மத்திய அரசு, கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, திட்ட அனுமதிக்கு டிட்கோ விண்ணப்பம் செய்தது.

இதை பரிசீலித்து வந்த மத்திய அரசு, இந்த வாரத்தில் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய விமான நிலையத்துக்கு இட தேர்வு மற்றும் திட்ட அனுமதி அவசியம். ஏற்கனவே, இட தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏப்., முதல் வாரத்தில் திட்ட அனுமதி அளிக்கப்பட உள்ள தகவல் கிடைத்துள்ளது.

அதை தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் துவக்கப்படும். நிலம் தந்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

Advertisement