திருமங்கலத்தின் பிரபல வணிக வளாகம் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்க தடை
சென்னை, திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாக நிர்வாகம், அங்கு வரும் வாகனங்களை நிறுத்த, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்த சென்னை நுகர்வோர் நீதிமன்றம், கூடுதல் கட்டணம் வசூலித்ததால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொசப்பேட்டை, சச்சிதானந்தம் முதல் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
சென்னை, திருமங்கலத்தில் 'வி.ஆர்.,சென்னை' எனும் வணிக வளாகம் உள்ளது. அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில், 2023 ஏப்., 26ல் என் இருசக்கர வாகனத்தை நிறுத்தினேன்.
ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் வரை வாகனத்தை நிறுத்தியதற்கு 80 ரூபாய், வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள்படி, பெரும் வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிடம் செய்து தர வேண்டியது அவசியம். வாகன நிறுத்துமிடம் என்பது வணிக வளாகத்தின் ஒரு பகுதி.
இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது. என்னிடம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலித்தது, நியாயமற்ற வர்த்தகம்.
எனவே, இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்காக 50 ஆயிரம் ரூபாயும் வழங்க, வி.ஆர்.சென்னை வணிக வளாக உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வளாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதி, வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கூறினாலும், அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க எந்த எந்த தடையும் இல்லை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பெரும் வணிக வளாகங்களில், கழிப்பறை, நகரும்படிகள், மின்துாக்கிகள் போன்றவை அடிப்படை வசதிகள் என்ற வரிசையில் உள்ளபோது, வாகன நிறுத்தும் இடமும் அடிப்படை வசதிகள் என்ற பட்டியலில் வருமா; சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே, வாகன கட்டணம் வசூலிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த கேள்விகளுக்கு, தமிழ்நாடு கட்டட விதிகளை பகுப்பாய்வு செய்வதன் வாயிலாக மட்டுமே விடை காண முடியும். ஆனால், அதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால், அதில் தலையிட விரும்பவில்லை.
இருப்பினும், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும், வணிக வளாக நிர்வாகம் தரப்பில் ஆணையம் முன் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரரிடம் வாகன கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் என்ற முடிவுக்கு, இந்த ஆணையம் வருகிறது.
திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.சென்னை வணிக வளாகம், தங்கள் வளாகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
நியாயமற்ற வர்த்தகம் வாயிலாக, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, திருமங்கலம் வி.ஆர்.சென்னை வணிக வளாகம் இழப்பீடாக 10,000 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக 2,000 ஆயிரம் ரூபாயும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இரு மாதங்களுக்குள் இந்த தொகையை வழங்கவில்லை எனில், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்