சிக்பேட்டையில் குடிகொண்டுள்ள ரங்கநாதா

பெங்களூரு, சிக்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ரங்கநாதசுவாமி கோவில். இந்த கோவில் அமைந்துள்ளதால், தெருவுக்கு கோவில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கோவிலின் மூலவராக ரங்கநாத சுவாமி உள்ளார். உடன் ஸ்ரீ பூதேவி, நீலா தேவியும் உள்ளனர். கோவிலின் மூலஸ்தானத்தில் ரங்கநாதசுவாமி அனந்த சயனத்தில், அழகாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் ஸ்ரீ பூதேவியும், நீலா தேவியும் இருக்கின்றனர்.

இதை பார்க்க, பார்க்க பக்தர்களுக்கு மனம் ஏங்கும், மனதார வேண்டினால் நினைத்து நடக்கும். இப்படிப்பட்ட கோவிலுக்கு, ஹிந்துக்களை தாண்டி, வெளிநாட்டில் வசிக்கும் பிற மதத்தினரும் வந்து வழிபடுவர்.

16ம் நுாற்றாண்டு



இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக விளங்குகிறது. கி.பி., 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. கோவில் விஜயநகர, ஹொய்சாளா கட்டட கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது.

கோவிலில் உள்ள ஒவ்வொரு துாண்களும் ஹொய்சாளா கட்டடக் கலையை பிரதிபலிக்கிறது. கோவிலுக்குள் இருக்கும் அழகிய குளத்தை பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல தோன்றும். மத்திய பெங்களூரில் அமைந்து உள்ள மிகவும் பழமையான, சக்தி வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கோலிலில் தேர் திருவிழா நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை இழுப்பர். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிடுவது விண்ணை பிளக்கும் அளவில் இருக்கும்.

வைகுண்ட ஏகாதசி



இதை விட மிக பிரம்மாண்டமாக, வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவின்போது, பெங்களூரு உட்பட பல ஊர்களிலில் இருந்தும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருகை தருவர். இந்த நன்னாளில் மட்டும், பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கூட்டத்தை சமாளிப்பதற்கும், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு உதவும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபடுவர்.

நடை திறப்பு: காலை 7:00 மணி - மதியம் 12:00 மணி வரை, மாலை 6:00 மணி - இரவு 8:30 மணி வரை


கோவிலுக்கு எப்படி செல்வது?




ரயில்: மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, சர் விஸ்வேஸ்வரா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லவும். பின், அங்கிருந்து நடந்தே கோவிலை அடையலாம்.

பஸ்: முதலில் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 234 இ என்ற எண் கொண்ட பஸ்சில் ஏறவும். கே.எல்.இ., சொசைட்டி கல்லுாரி பஸ் நிறுத்தத்தில் இறங்கவும்; அங்கிருந்து 10 நிமிட நடை பயணத்தில் கோவிலை அடையலாம்.

Advertisement