டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

26

சென்னை: டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சட்டப்பூர்வமான சோதனையை முடக்கும் வகையில் தொடரப்பட்டுள்ள தமிழக அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.


@1brடாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதே கோரிக்கையை முன் வைத்து டாஸ்மாக் நிர்வாகமும் வழக்கு தொடுத்துள்ளது.


தமிழக அரசு, டாஸ்மாக் தாக்கல் செய்த இந்த வழக்கில் அமலாக்கத் துறை சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறி உள்ளதாவது:


அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வ விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிட வாய்ப்பு இருந்தும் நேரடியாக ஐகோர்ட்டை நாடியது தவறு.


சோதனையின்போது அதற்கான வாரண்ட்டை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோதனைக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் முறையிடக்கூடிய மாற்று வாய்ப்பு இருந்தும் நேரடியாக கோர்ட்டை நாடியது தவறு.


டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது.


எந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை. சோதனையின் போது அதிகாரிகள் உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் அனுமதி வழங்கிய பின்னரே அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.


ஆதாரங்கள் சேகரிக்கவே பெண் அதிகாரிகளின் மொபைல் போன்கள் சேகரிக்கப்பட்டன. சட்டப்பூர்வமாக சோதனையை முடக்கக்கூடிய வகையில் தொடரப்பட்டுள்ள தமிழக அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.


இவ்வாறு தமது மனுவில் அமலாக்கத்துறை கூறி உள்ளது.

Advertisement