மாநில கைப்பந்து: எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'

சென்னை, தமிழ்நாடு கைப்பந்து கழகம் ஆதரவுடன், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிந்தது.

இப்போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. காலிறுதி வரை 'நாக் அவுட்' முறையிலும், இறுதிச் சுற்றுகள் 'லீக்' அடிப்படையிலும் நடந்தன.

இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, லயோலா கல்லுாரி, ஜேப்பியார் பல்கலை மற்றும் திருநெல்வேலி விளையாட்டு குழு ஆகிய நான்கு அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இறுதிச் சுற்றின் முதல் 'லீக்' போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியுடன் லயோலா கல்லுாரி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி 25 - -21, 25 - -18, 25- - 19 என்ற புள்ளிக்கணக்கில், நேர் செட்டில் வெற்றியை ருசித்தது.

இரண்டாவது 'லீக்' சுற்றில், ஜேப்பியார் பல்கலை அணியை 25 - -21, 25- - 18, 25 - -15 என்ற செட் கணக்கிலும் மூன்றாவது 'லீக்' சுற்றில் திருநெல்வேலி அணியை, 25 - -21, 25- - 18, 25 - -19 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.

லயோலா கல்லுாரி, திருநெல்வேலி விளையாட்டு குழு, ஜேப்பியார் பல்கலை அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.

Advertisement