ஆரணி ஆற்று கரைகளை சீரமைப்பதில் அலட்சியம் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ளநீரால் பரிதவிப்பு

பொன்னேரி,:மணல் குவாரிக்காக வெட்டி எடுக்கப்பட்ட ஆரணி ஆற்றின் கரைகளை சீரமைப்பதில் நீர்வளத்துறையினர் அலட்சியமாக இருப்பதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் நான்கு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுவதால், அச்சத்துடன் வாழும் மக்கள் தீர்வு ஏற்படுத்தக்கோரி, அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட ஆரணி ஆற்றை ஒட்டி குண்ணம்மஞ்சேரி, இந்திரா நகர், பெரியகாவணம், நரிக்குறவர் காலனி ஆகிய கிராமங்களில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இதில், இந்திரா நகர் பகுதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்வர்களின், 60 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குடியிருப்புகளை ஒட்டியிருந்த பகுதிகளில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது. அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த 2021ல், பொன்னேரி அடுத்த வைரவன்குப்பம் பகுதியில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள தனியார் நிலங்களில் இருந்து மணல் அள்ளப்பட்டது. லாரிகள் சென்று வருவதற்காக, இந்திரா நகர் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் கரைகளை, 100 மீ., நீளத்திற்கு சேதப்படுத்தப்பட்டது.
நுாற்றுக்கணக்கான லாரிகளில் தனியார் நிலங்களில் இருந்தும், ஆற்றில் இருந்தும் மணல் அள்ளப்பட்டது. மணல் அள்ளும் பணிகள் முடிந்த நிலையில், சேதப்படுத்தப்பட்ட கரைகள் மூடி சீரமைக்கப்படாமல் விடப்பட்டது.
இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் நேரங்களில், கரை இல்லாத பகுதிகள் வழியாக ஆற்றுநீர் வெளியேறி, இந்த கிராமங்களை சூழ்ந்து விடுகிறது. இதன் காரணமாக, கிராமவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதித்து, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.
இந்நிலையில், நேற்று இந்திரா நகர், குண்ணம்மஞ்சேரி கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள், பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர்.
பொன்னேரி ஆர்.டி.ஓ., கனிமொழியிடம், 'மணல் குவாரிக்காக சேதப்படுத்தப்பட்ட கரைகளை சீரமைப்பதில், நீர்வளத்துறையினர் அலட்சியமாக செயல்படுகின்றனர். மழை பெய்தால், தண்ணீர் எப்போது குடியிருப்புக்குள் புகும் என, அச்சத்துடன் வசித்து வருகிறோம். எனவே, உடனடியாக தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., கனிமொழி, 'அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து, விரைவில் அப்பகுதியில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என உறுதியளித்தார். அதை தொடர்ந்து, கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் கண்துடைப்பு
ஒவ்வொரு மழைக்கும் நகராட்சி, வருவாய், நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதில்லை. மழை பெய்தால், படகுகள் உதவியுடன் மக்களை மீட்க வேண்டியுள்ளது. உடமைகள் இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகாரிகள் கண்துடைப்பிற்காக, உடனடியாக கரை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறி செல்கின்றனர். மழை நின்ற பின் கண்டுகொள்வதில்லை. தற்போது, ஆற்றில் நீர் இருப்பு குறைந்துள்ளதால், அடுத்து வரும் மழைக்கு முன், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- சி.கோபி,
சமூக ஆர்வலர் - பகுதிவாசி,
குண்ணம்மஞ்சேரி,
பொன்னேரி.
வெள்ளநீரால் அச்சம்
ஒவ்வொரு ஆண்டும் பிச்சாட்டூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கும்போது, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கரை இல்லாத பகுதி வழியாக வெளியேறும் ஆற்றுநீர் குடியிருப்புகளை சூழ்ந்துவிடுகிறது; அச்சத்துடன் வசிக்கிறோம். பல்வேறு தரப்பினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. இந்த ஆண்டு மழைக்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒய்.மலர்கொடி
குடியிருப்புவாசி,
இந்திரா நகர்,
பொன்னேரி.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்