'டி.என்.சி.ஏ., லீக்' கிரிக்கெட் காஸ்மோபாலிடன் கிளப் வெற்றி

சென்னை, தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 2024 - 25ம் ஆண்டிற்கான லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள், மாநிலம் முழுதும், பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன.

இதில், தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள், கிரிக்கெட் குழுக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் அணிகள், மண்டலம் வாரியாக குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன.

இதில், சேத்துப்பட்டு பல்கலை மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 'ஏ' மண்டலம், பிரிவு 6ல் இடம்பெற்றுள்ள காஸ்மோபாலிடன் கிளப் அணியும், ஜெய்ஹிந்த் அணியும் மோதின.

போட்டி, 30 ஓவர் அடிப்படையில் நடந்தது. 'டாஸ்' வென்ற காஸ்மோபாலிடன் அணி, முதலில் களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு, 138 ரன்கள் எடுத்தது.

சுலபமான இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஜெய்ஹிந்த் அணி வீரர்கள், காஸ்மோபாலிடன் அணி வீரர் விஜயபிரபாகரனின் சுழலில், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால், அந்த அணி, 14 ஓவர்களுக்கு, 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

காஸ்மோபாலிடன் கிளப் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் விஜயபிரபாகரன், 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 7 விக்கெட்டுகளைச் சாய்த்து, ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

Advertisement