அருப்புக்கோட்டை நகராட்சியில் 100 சதவிகித வரி வசூல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி 100 சதவீத வரிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் வீடுகள் நகராட்சி கடைகள், தொழில் வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரிகள் வசூலிக்க அருப்புக்கோட்டை நகராட்சியில் கமிஷனர் தலைமையில் பல்வேறு குழுக்கள் வரிகள் வசூலிப்பில் முனைப்பு காட்டின. அருப்புக்கோட்டை நகராட்சியில் 2024- - 25 ம் ஆண்டிற்கு 111.5 சதவிகித வசூல் செய்து மாநில அரசின் நிதியான சி.எம்.சி., நிதியை பெறுவதற்கு 2 ஆண்டுகளாக தகுதி பெற்றுள்ளது.

மற்ற வரியில்லா இனங்களான தொழில் வரி, காலி இட வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனம் ஆகியவற்றில் பல ஆண்டுகளுக்கு பின்னர் 100 சதவிகித வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் தலைமையில் 100 சதவிகித வசூல் செய்த நகராட்சி அலுவலர்கள் அனைவரையும் பாராட்டினார்.

Advertisement