திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்கள்: மனம் திறந்தார் ஒபாமா

68

வாஷிங்டன்: மனைவி மிச்சேல் உடனான திருமண வாழ்க்கையில் சில காலம் போராட்டங்கள் இருந்தது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தன் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவின.அதற்குத் தகுந்தபடி, அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழா மற்றும் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உடல் அடக்கம் ஆகிய நிகழ்வுகளில், வழக்கத்துக்கு மாறாக, மனைவி இன்றி தனியாக ஒபாமா கலந்து கொண்டார்.
இவ்வாறு தனியாக வந்தது, விவாகரத்து வதந்திகளை வலுப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில்ஹாமில்டன் கல்லுாரி தலைவர் ஸ்டீவன் டெப்பர் உடன் ஒபாமா 63, கலந்துரையாடினார்.

அப்போது ஒபாமா கூறியதாவது:

எனது மனைவி மிச்சேல் உடனான திருமண வாழ்க்கையில் சில காலம் போராட்டங்களை சந்தித்தேன். நான் 2009 முதல் 2017 வரை அதிபராக இருந்தேன். அந்த 8 ஆண்டுகள் காலம் எனது மனைவி மிச்செலும் நானும் சில கடினமான சவால்களை சந்தித்திருக்கிறோம்.
அதிபர் பணியில் நீண்ட நேரம் செலவிட வேண்டிய காரணத்தால், எனது திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட்டன.
அதிபர் பதவிக்காலம் முடிந்த பிறகு, அந்த சங்கடங்களை சரி செய்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டேன்.

திருமண உறவில் கடினமான சவால்கள் ஏற்பட்ட போது, எங்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை, பொறுமை, மற்றும் முயற்சியால் அதனை கடந்து வெற்றி கண்டோம்.

எங்களுக்குள் இருந்த பிணைப்பை மேலும் வலுப்படுத்த, வேடிக்கையாக செயல்களில் ஈடுபட்டோம்.

உண்மையான காதல் என்பது கடினமான நேரங்களில் ஒன்றாக இருக்க முடிவு செய்வதுதான்.

இவ்வாறு ஒபமா கூறினார்.

ஒபாமாவின் இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலர் தங்கள் திருமணங்களிலும் சில சவால்கள் இருந்தன என்பதை ஒப்புக்கொண்ட ஒபாமாவின் நேர்மையான பேச்சை பாராட்டுகின்றனர்.

ஒபாமாவின் மனைவி மிச்சேல் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், இதே போன்ற கருத்தை கூறியிருந்தார்.
ஒபாமா அரசியலில் நட்சத்திரமாக உருவாகி வந்த நிலையில், தங்கள் உறவில் சிக்கல்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார்.

Advertisement