மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது; விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்

8


திருவண்ணாமலை: விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய
கேள்விக்கு, ''மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.


நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு வழங்கிய 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்தது. இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு சீமான் அளித்த பதில்: தம்பிக்கு தேவைப்படுகிறது. அவர் கேட்டு பெற்று இருக்கிறார். எனக்கு தேவைப்படவில்லை. நான் நினைப்பேன்.


இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் நான் தான் பாதுகாப்பு. எனக்கு எதுக்கு பாதுகாப்பு. நான் என் தம்பி, தங்கச்சியை சந்திக்கிறேன். மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது ராணுவ அரசியலுக்கு தான் தேவை.


மக்கள் அரசியலில், புகைப்படம் எடுத்து கொள்ளலாமா என்று கேட்பார்கள். அவர்களுக்காக தான் வேலை செய்ய வந்திருக்கிறோம். மண்ணை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதை வெல்ல வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.


புதிய பா.ஜ., மாநில தலைவர் நியமன செய்யப்பட உள்ளது என்கிறார்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அது அவர்கள் கட்சி. அவர்களது கட்சி தலைமை முடிவு எடுக்கும். எல்லாத்திலும் கருத்து சொல்லுங்கள் என்று கேட்டு கொண்டு இருக்க கூடாது. அது அவர்கள் கட்சி. அவர்கள் தலைமை முடிவின் படி இயங்குவார்கள்' என சீமான் பதில் அளித்தார்.


நிருபர்: த.வெ.க.,வினர் போராட்டத்தில் சட்டத்தை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரியவில்லை. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

சீமான்: எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது தவறு. எதிராக போராட வேண்டும் என்ற உணர்வு மதிக்கதக்கது. நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கே ஏதும் தெரியவில்லை.

Advertisement