கார்கள் நேருக்கு நேர் மோதல் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் நோனாங்குப்பம் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

பாகூர் : கார், பைக் மீது மோதி எதிரே வந்த மற்றோர் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன், 40. இவர் நேற்று மதியம் வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில், பைக்கில் சென்ற கடலுார் முதுநகர் பகுதியை சேர்ந்த முகமது அலி, 38; அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். வேகனார் காரை ஓட்டிவந்த ராஜகுருநாதனும் படுகாயமடைந்தார். இந்த விபத்தால், மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement