சொத்து விபரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முடிவு

9



புதுடில்லி: டில்லி நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 14ம் தேதி டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உள்விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்.,1ம் தேதி சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் இந்த சொத்து விபரங்கள், சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பூஷன் ராம்கிருஷ்ணா காவி, நாகர்த்னா, விக்ரம் நாத், மகேஷ்வரி ஆகியோர் ஏற்கனவே சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement