சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !

12


கன்னியாகுமரி: சொத்து மதிப்பு சான்று வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., அமல ராணி மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுக்காவில் உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமல ராணி என்பவர் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இவரது உதவியாளர் பேபி. நெய்யூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மகன் ஆறுமுகம், 56, என்பவர் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்.


இவர் தனது ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணத்தை காண்பித்து, ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்று கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு வி.ஏ.ஓ., அமலராணி ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். பேரம் பேசி ரூ.3 ஆயிரம் தந்தால், சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று அமலராணி கறாராக கூறியுள்ளார்.



லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை வி.ஏ.ஓ.,விடம் ஆறுமுகம் வழங்கி உள்ளார். அவர் தனது உதவியாளர் பேபியிடம் கொடுக்க சொல்லி உள்ளார்.


உதவியாளர் பேபி லஞ்சம் பணத்தை வாங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சால்வன் துரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதவி உடன், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளரை கையும், களவுமாக கைது செய்தனர்.

Advertisement