இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

44

சென்னை: இப்போது நீங்கள் டில்லிக்கு போய்விட்டு வந்தீர்களே, இதை பற்றி சொல்லிவிட்டு வந்து இருக்கிறீர்களா? என கச்சத்தீவு விவகாரத்தில் இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.


கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, இ.பி.எஸ்., பேசியதாவது: 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, கச்சத்தீவுவை திரும்ப பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 2021ம் ஆண்டு முதல் இந்த விவகாரத்தில் தி.மு.க., அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் இங்கு வேகமாக, ஆளுங்கட்சியாக இருக்க கூடிய தி.மு.க.,வை குறை சொல்லி சில செய்திகளை பதிவு செய்து கொண்டு இருக்கிறார். தீர்மானம் முறையாக கட்டுப்பாட்டோடு, ஒற்றுமையாக நிறைவேற்றினோம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு தான் சொன்னேன்.



எதிர்க்கட்சி தலைவர் தேவையில்லாமல் பல பிரச்னைகளை சொல்கிறார். நானும் சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். எங்களை பார்த்து கேட்கிறீர்கள். நீங்களும் ஆட்சி பொறுப்பில் இருந்து இருக்கிறீர்கள். 10 வருடம் நீங்களும் இருந்து இருக்கிறீர்கள். அப்பொழுது என்ன செய்தீர்கள்? நாங்கள் கிட்டத்தட்ட இதுவரைக்கும் 54 கடிதங்களை அனுப்பி வைத்திருக்கிறோம்.


இப்போது நீங்கள் டில்லிக்கு போய்விட்டு வந்தீர்களே, இதை பற்றி சொல்லிவிட்டு வந்து இருக்கிறீர்களா? இதற்கு பதில் சொல்லுங்கள். நான் பலமுறை டில்லிக்கு போன பொழுது, பலமுறை வலியுறுத்திவிட்டு வந்து இருக்கிறேன். மனுவாக கொடுத்துவிட்டு வந்து இருக்கிறேன். இதைவிட வேற என்ன செய்ய முடியும்?


54 கடிதங்களை அனுப்பி இருக்கிறேன். வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இது குறித்து சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன். தீர்மானத்தில் இருப்பது குறித்து தான் பேச வேண்டும். தீர்மானத்தில் இருக்கும் தகவல்களை அரசியல் ஆக்குவதற்காக பேசுவதை சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கிறீர்களா? என்பது என்னுடைய கேள்வி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement